கடல்கோள்... 2004

இது மரண்ங்கள் மலிந்து போன கிரமத்தின் கதை. . .

உயிர் பலிகொண்ட கடற்கோள் பேரலை அடங்கிய மயான பூமியில் நாங்கள் பயணம் செய்தோம். மட்டக்களப்பு நகருக்கு வடக்கே இருக்கும் சீலா முனை கிராமத்தின் வாவியோரத்தில் இருந்து எதிர்க்கரையில் இருக்கும் நாவலடிக் கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் ரவி. வாவியோடும், கடலோடும் அதிகம் பரிச்சயம் உள்ள மீனவரான ரவி இன்னமும் பேரழிவு தந்த அதிர்ச்சி. அவலம், துன்பம் எதிலிருந்தும் மீளாதவராய் இருந்தார். இன்று நாவலடி கிராமத்தில் எஞ்சிய மக்கள் இவரைப் பற்றியே பேசுகின்றனர். நீரில் சிக்குண்டு தத்தளித்துக் கொண்டிருந்த நூறு பேரை இவர் காப்பாற்றியிருக்கிறார்.
ரவி பார்த்துக் கொண்டிருந்த நாவலடி கிராமம் இன்று பிணங்கள் புதையுண்டு போன மணல் மேடையாகக் காட்சி தருகின்றது. மட்டக்களப்பு வாவிக்கும், கடலுக்கும் இடையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் 475 குடும்பங்களைச் சேர்ந்த 1890, பேர் வசித்து வந்ததாக பிரதேச செயலகத் தரவுகள் கூறுகின்றன.
இவர்களில் 310 பேர் இறந்து போயுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தொகை 1000 க்கும் அதிகமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கு வசித்து வந்த குடும்பங்கள் அனைத்தும் குறைந்தது தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரையாவது இழந்துள்ளனர்.
கடல்வெள்ளம் உயர்ந்த போது வாவியின் நடுவில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக ரவி கூறுகிறார். அவர் தனது அனுபவத்தை விபரித்தார். நாங்கள் போட்டில் நின்ற போது திடீரென நீர்மட்டம் இப்பொழுது இருப்பதிலிருந்து 13,14 அடி உயர்ந்தது. எங்களுக்குச் சுற்றிலும் நீர் தான் தெரிந்தது. சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் வெறும் இலைகள் இருப்பதுபோல், அவற்றின் உச்சிகள் தெரிந்தன. சிறிது நேரத்தில் நீர் குறையத் தொடங்கியபோது தான் எங்களுக்கு விபரீதம் புரிந்தது. ஊரைக் கழுவிக் கொண்டு தண்ணீர் கடலுக்குள்; வடிந்து சென்றது. ஆற்றுக்குள் இருந்து மக்கள் கத்திக் கொண்டிருந்தனர். அவர்களின் ஓலங்களுக்கு இடையில் எங்களால் இயலுமான வரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தோம். இருப்பினும் ஆற்றின் உள்ளே தத்தளித்தவர்களில் ஒரு சிலரைத்தான் எங்களால் காப்பாற்ற முடிந்தது. பெருமளவு மக்கள் மரங்களைப் பிடித்த வண்ணம் கரைகளிலே கூக்குரலிட்டவாறு நின்றனர். அவர்களில் 100 பேர் வரையில் எங்களால் காப்பாற்ற முடிந்தது. இவர்களில் 8 இராணுவத்தினரும் அடங்குவர். மக்களைக் காப்பாற்றுவதற்கு இராணுவமும் எங்களுக்கு ஓரளவு உதவி புரிந்தது. கடைசியில் எனது படகும் உடைந்து போய்விட்டது. இந்தப் போராட்டம் முடிந்த பின்னர் சடலங்கள் மிதக்கத் தொடங்கின. ஆற்றில் மிதந்த எல்லாச் சடலங்களையும் எங்களால் எடுக்க முடியவில்லை. அவை கடலோடு சங்கமிக்கத் தொடங்கின என் அதிர்ச்சியான தனது அனுபவத்தைக் கூறுகிறானர் ரவி.
அரைமணி நேரம் வரையில் தண்ணீர் கிராமத்திற்குள் இருந்தது. எங்களால் எடுக்க முடிந்த சடலங்களை எடுத்தோம். இப்போது உள்ளவற்றை அவை உள்ள நிலையிலேயே எரியூட்டுகிறோம். பெருமளவில் கம்பிவேலிகளில் சிக்கியபடி பெருமளவு பெண்களின் சடலங்கள் இருக்கின்றன என்று ரவி கூறிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த அவரது உதவியாளர் இரவு பூராகவும் நாவலடி கிராமத்தில் அழுகுரல் கேட்பதாகவும் பேரலை வந்த அன்றிரவு தங்களைக் காப்பாற்றுமாறு நாவலடிப் பகுதியில் இருந்து கூக்குரல் கேட்ட வண்ணமே இருந்தது. எங்களால் அந்தச் சத்தங்களைத் தாங்க முடியவில்லை. ஆற்றங் கரை ஓரத்தில் இருந்த நாங்கள் உடனடியாக அதிலிருந்து தூர இடங்களுக்குச் சென்று தங்கினோம் என்றார்.
ரவியுடன் உரையாடிக் கொண்டிருக்கையிலே நாவலடியில் இருந்து சிலர் வள்ளத்தின் மூலம் வாவியினைக் கடந்து சீலாமுனைக்கு வந்தனர். இவர்கள் இறந்த தங்கள் உறவுகளுக்கு 8ஆம் நாள் செய்யப்படும் சடங்கினை செய்து விட்டு வருவதாக ரவி கூறினார். அழுத வண்ணம், வாய்விட்டு தங்கள் வேதனையைக் கதறிய வண்ணம் அவர்கள் வள்ளத்திலிருந்து இறங்கினர். 'எங்கட பிள்ளைகள காப்பாற்ற முடியல்லையே" என்று அவர்களின் அவலமான குரல் மிக வல நிறைந்ததாய் இருந்தது.
என்.சௌந்தராஜா தனது இரண்டு பிள்ளைகளையும் தாய், தந்தையரையும் இழந்து தனது மனைவியை மட்டும் காப்பாற்றி இருக்கிறார். இறந்து போன நால்வரில் மூவரின் சடலத்தை மட்டுமே மீட்டெடுக்க முடிந்த இவர் இன்று தனது உடைந்து போன வீட்டினுள்ளே இறந்தவர்களுக்கு 8 நாள் கிரியை செய்து விட்டு வந்திருக்கிறார். தனது உறவுகள் பறிபோன சோகத்தை விபரித்தார். 'என்ட பிள்ளை கடைசி வரையும்" அப்பா", அப்பா. என்று கத்தியபடி என் கழுத்தை கட்டியணைந்தவாறே இருந்தான். கடல் அலைகளில் தாக்கம் அதிகமாக இருந்த போது நான் நீருக்குள் சிக்கி செத்துப் போய் விடுவேன் என்ற கட்டத்தில் அவனாவது பிழைக்கட்டும் என்று என்னில் இருந்து அவனைக் கழற்றி விட்டேன். அவன் கடலோடு போய்விட்டான். மற்ற மகன் வகுப்புக்குப் போனவன் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து கடலோடு சங்கமமாகி விட்டான்.
எங்களுக்கு யாராவது இதைப் பற்றிச் சொல்லியிருந்தால் சொத்துகள் அழிந்தாலும் பரவாயில்லை, எங்கள் உறவுகளையாவது காப்பாற்றியிருக்கலாம். 'இனி இந்த உயிர்களை எவ்வாறு நாங்கள் மீட்டெடுப்பது" என்று சௌந்தராஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தனது நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்து அவர்கள் விபரங்களைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையெ என்று கண்களில் நீர்வழியக் கூறினார் சௌந்தராஜாவின் மைத்துனரான எஸ்.கெனமன்.
' 5 நிமிடத்திற்கு முதல் சொல்லியிருந்தால் கூட தப்பியிருப்போம். இன்றைக்கு இந்த ஊரே இப்படி அழிந்து போயிருக்காது. எங்களிடம் 300 இற்கும் மேற்பட்ட படகுகள் இருக்கின்றன. அதில் எங்கள் உறவுகளை ஏற்றி நடு வாவிக்கு வந்தாவது உயிர்களைக் காப்பாற்றியிருப்போம்" என்றான் கெனமன். இனி விறகு வெட்டிப் பிழைத்தாலும் பிழைப்போமே தவிர, இந்த மயான பூமியில் குடியேற மாட்டோம் என்று அவர் கூறிக் கொண்டிருக்கும்போது இப்பகுதியில் மீள்குடியமர 30000 ரூபா தருவதாகவும் இனிமேல் இவ்வாறான பிரச்சினைகளின்போது உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரச அதிகாரிகள் கூறுகின்றனர் என ஒரு இளைஞர் தெரிவித்தார். அவர் கூறிக் கொண்டிருக்கும்போதே கெனமனும் சௌந்தராஜாவும் கோபமடைந்தனர். இங்கிருந்து பார்த்திருந்தால் தான் எங்கட கஷ்டம் புரியும். இனி கடலுக்குப் பக்கத்தில் ஒரு நாளும் இருக்க மாட்டோம். நாவடி இப்ப ஊர் கிடையாது. அது சடலங்கள் நிரம்பிய சுடுகாடு என்று கூறியபடி அரசாங்கத்தைக் கெட்ட வார்த்தைகளினால் திட்டத் தங்கள்; ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.
எங்களுக்கு இப்படியான அலை பற்றியும் அலை ஏற்பட்டால், கடலில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் சொல்லியிருந்தால் இன்றைக்கு எங்கள் உயிர்களைக் காப்பாற்றியிருப்போம். இன்று தரை மட்டமான எங்கள் வீடுகளுக்குச் சென்று அழுகிய பிணங்களுக்கு இடையிலும், துர்நாற்றத்துக்கு இடையிலும் இறந்தவர்களுக்கான இறுதிக் கடமைகளை நிறைவேற்ற வேண்டி வந்திருக்காது என்றார் சௌந்தராஜா. மிகவும் உணர்வு பூர்வமாக இருந்த இவர்களால் அதிக நேரம் பேசமுடியவில்லை. என் உறவினர்கள் 42 பேர் மாண்டு போய்விட்டனர். இனி எங்களுக்கு என்ன வேண்டும். யாருக்கு வேண்டும் நிவாரணங்கள் எல்லாம் என்கிறார். தன் மூன்று பிள்ளைகளின் உடல்களைக் கூடக் காணக் கிடைக்கவில்லையே என்ற வற்றாத கவலையோடு இருக்கும் கெனமன்.
யாராலும் பேச முடியவில்லை. பேச ஆரம்பித்ததும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். மனோநிலை ரீதியில் இவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்பு வெளிப்படையாகவே தெரிகின்றது. இப்போது கௌரீசன் என்ற கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரி இளைஞன் மனோவியல் ரீதியான தனது பாதிப்பைக் கூறினார்.
எனக்கு மக்களின் கத்துகிற, ஓடுகிற சத்தங்கள் இரைச்சல்களைக் கேட்டாலோ இப்போது பயமாக இருக்கிறது. நான் தண்ணீர் திரண்டு வருவதைக் கண்டு ஓடிச் சென்று ஒரு மேல் மாடி வீட்டில் ஏறினேன். மேல் மாடியில் கீழ்த் தளத்தை நிரப்பிய தண்ணீர் மேலே வருமோ என்று பயந்து கொண்டிருந்தோம். தண்ணீர் வடிந்து செல்லும்போது மக்களை அடித்துச் செல்வதைப் பார்த்தேன். அவர்களின் ஓலம் இன்னமும் என்னுள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. சாகலாம், ஆனால், இப்படி பயந்து சாகக் கூடாது. எங்களின் ஒரு தலைமுறை அழிந்து போய் விட்டது (12000 சிறுவர்கள் இறந்துள்ளதாக இதுவரையில் கிடைத்த உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.) இந்த மிகப் பெரிய அழிவை முன்கூட்டியே சொல்வதற்கு யாராலும் முடியவில்லையே. குளோபர் விலேஜ் என்கிறார்கள். உலகம் சுருங்கி விட்டது என்கிறார்கள். ஆனால் 3 மணிநேரத்துக்கு முதல் நடந்த விடயத்தை நாங்கள் அறிய முடியவில்லையே. இது தான் தகவல் யுகமா? நியூஸிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், எங்களுக்கு அறிய முடியவில்லை. இதைத் தான் உலக மயமாக்கல் என்பதா? என்று கேள்வி எழுப்பினார் கௌரீசன்.
நான் குழந்தைகள், சிறுவர்களை நினைத்துக் கதறினேன். என் கண் முன்னால் அடித்துச் செல்லப்படும் சிறுவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்று ஆதங்கம் எனக்கிருக்கின்றது. இருப்பினும் ஆற்றுத் தண்ணீரோடு பரிச்சயமான இந்தச் சிறுவர்கள் ஓடித் தப்பி தங்கள் உயிர்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் என்னால் இன்னமும் சகஜ நிலைக்கு வர முடியவில்லை. என்று சொல்லும் கௌரீசனின் முகத்தில் இன்னமும் கலவரம் தெரிகிறது.
எந்த உதவியும் இன்றி நாங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள முடியாமல் நீரோடு பேராடியபடி இறந்துபோன உடல்கள் இன்னமும் நாவடியில் இருப்பதாக ரவி கூறுகின்றனர். இன்னமும் ஆங்காங்கே இந்த உடல்கள் இருந்த வண்ணமே இருக்கின்றன. பாண்டி மன்னனின் புகழ் சொல்லும் ஒரே ஒரு பண்டைய பாடலில் 'பிடித்த வேலுடனும் மடித்த வாயுடனும் பாண்டிய வீரன் போர் முனையிலே இறந்து கிடக்கிறான்" என்பதைப் போல இறந்த பின்னும் தங்கள் உயிருக்கான போராட்டத்தை வெளிக்காட்டிக்கொண்டு இன்னமும் உடல்கள் ஆற்றினுள் மிதந்த வண்ணமும் நாவலடிப் பிரதேசத்திலும் இருந்து கொண்டிருக்கின்றன.
இந்த நாவலடி கிராமத்தில்தான் அன்னை பூபதியின் சமாதி இருந்தது. இன்று அந்த பூமி சமாதிகளின் பூமியாகிவிட்டது. இந்த கிராமத்துக்கு அண்மையாக இருந்த காயந்திரி பீடத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் கடலினால் காவு கொள்ளப்பட்டனர். இன்று பல கிராமங்கள் இல்லாமலே போய் விட்டன. இந்தக் கிராமங்களில் இருந்து தப்பியவர்களின் உள்ளங்களும் சொனந்தராஜாவைப் போலவும் கெனமனைப் போலவும் ரவியைப் போலவும் கௌரீசனைப் போலவும் கொதித்துக் கொண்டு வேதனையின் வடிவமாயிருக்கின்றனர். இதில் சொல்லப்பட்ட கதை ஒரு கிராமத்தின் கதை மட்டு மல்ல ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த கதையின் ஒரு பிம்பமே.

சென்னை நிகழ்வுகள். . .

சென்னையில் கடந்தவரத்திலும் இந்த வாரத்திலும் பதிவு செய்யப்பட வேண்டிய பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. பல்வேறு வேலைப் பணிகளாலும் என்னால் பதிவிட முடியவில்லை.

*தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இரங்கல் கூட்டம்

*சென்னைத்திரைப்பட விழா

*இன்குலாபின் நாடகங்களின் விழா
இந்த விழா 22,23,24 ஆம் திகதிளில் சென்னை தி.நகர் தியாகராச அரங்கில் நடைபெறுகிறது.அவ்வை நாடகம் இன்று நடைபெற்றது.23 ஆம் திகதி மணிமேகலையும்,24ஆம் திகதி குறிஞ்சிப்பாட்டு ஆகிய நாடகங்களும் நடைபெறும்.

*நகுலன் பற்றிய புகைபடக் கண்காட்சியும் நகுலன் நூல்களின் வெளியிட்டுவிழாவும்


எனப் பலவற்றைச் சொல்ல நினைத்தேன் முடிய வில்லை.இருப்பினும் வில்வரின் நினைவுகூட்டம் பற்றிய பதிவினத்தருகிறேன்.நகுலனின் புகைப் படங்களுடன் அவர் குறித்தும் நிகழ்வு குறித்தும் பின்னர் எழுதுகிறேன்.

* வில்வரத்தினம் நினைவுக் கூட்டம்

சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக அரங்கு.

பல்கலைக்கழக மாணவர்களின் கவிதை ஆற்றுகையுடன் இந்த கூட்டம் ஆரம்பமாகியது.அதன் பின்னர் வாசுகி செயபாலன்(வ.ஐ.ச.செயபாலனின் மனைவி) அவர்கள் வில்வரின் பாடல்களைப் பாடினார்.அதன் பின்னர் எழுத்தாளர்கள் செயப்பிரகசம்,ஞானக்கூத்தன்,கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துசாமி,கவிஞர்கள் இன்குலாப்,வ.ஐ.ச.செயபாலன்,அறிவுமதி உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் வீ.அரசு தலைமை தங்கினார்.இறுதியிலும் வாசுகி செயபாலன் வில்வரின் கவிதைகளைப் பாட நிகழ்வு நிறைவு பெற்றது.

குறிப்பு:
இந்த நிகழ்வு முழுமையாக என்னால் ஒளிப்பதிவு செய்யப் பட்டது. பல்கலைக்கழகத்தின் வேண்டுதலுக்கு இணங்க அவர்களின் ஒத்துழைப்போடு இதன் சிறு தொகுப்பு உள்ளடங்கலாக வாசுகி பாடிய வில்வரின் பாடல்கள் மற்றும் தேர்ந்தெடுத்த வில்வரின் கவிதைகளை வைத்து 45 நிமிட நேரம் கொண்ட ஒரு ஆவணத்தினைக் கொண்டு வரவுள்ளேன். முடிந்தால் அதன் ஒரு பகுதியை இணையத்தளத்திலும் போடலாம். மற்றும் மதி பதிவு செய்திருந்த வில்வரின் குரலையும் வேறுயாரிடமாவது இதைபோன்ற வில்வரின் பதிவுகள் இருந்தால் அவற்றையும் முன் அனுமதியோடு இணைத்துக் கொள்ளலாம் என்றுள்ளேன்.முடியுமானவர்களிடமிருந்து வழமை போல் உதவியை எதிர்பார்க்கிறேன்.

Anton Balasingam . . '.தேசத்தின் குரல்'

அவர் இருக்கும் போது தெரியாத ஒரு இடைவெளி இப்போது அல்லது இனி தெளிவாகத் தெரியும். பல்வேறு விமர்சனங்களுக்கப்பால் தமிழர் உரிமைப் போராட்டத்தில் பாலசிங்கம் அவர்களின் பங்களிப்பு அல்லது இடம் நிரப்பல் என்பது தவிர்க்க் முடியாத ஈடு செய்ய முடியாத இழப்புதான்.

அவர் இருந்த பொழுதுகளில் ஏன் இந்த மனுசன் உப்புடியெல்லாம் பேசுது. மதியுரைஞர் எண்டதுக்காக அதிகப் பிரசங்கிதனமாக இருக்க கூடாது எண்ட விமர்சனங்கள் வந்திருந்தன. ஆனால் பாலாண்ணை இல்லையென்கிற போதுதான் அதன் இடைவேளி எத்தனை விசாலமானதாக நிரப்புவதற்கு கடினமானதொன்றாக இருக்க்கப் போகிறது என்பது புரியும்.

விடுதலைப் புலிகளை முடிந்தளவு சர்வதேச ரீதியில் பரிச்சயப் படுத்த வைத்ததிலும் சரி புலம் பெயர்ந்த தமிழர்களை குறைந்த பட்சமாவது ஒன்றிணைப்பதிலாவதும் சரி பாலா அண்ணையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இது அதிகமான இழப்புத்தான்.

தமிழரின் போராட்டம் விடுதலைப் புலிகளின் இராணுவப் போராட்டமாக மட்டும் இல்லாமல் ஒரு மக்கள் போராட்டமாக அதனைக் கொண்டு செல்வதே பாலாண்ணைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்.

தேசத்தின் குரலே, விடைதருகிறோம் மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் போராட்டத்தில் கைகோர்த்தபடியே. . .

வில்வரத்தினம் நினைவுக் கூட்டம்.

காலஞ்சென்ற ஈழத்துக் கவிஞர் சு.வில்வரத்தினத்தின் நினைவுக் கூட்டமொன்று சென்னையில் நடைபெற்றது. எழுத்தாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தலமையில் 13.12.2006 புதன் கிழமை தேனாம்பேட்டை பார்வதி அரங்கில் இந்த கூட்டம் நடந்தது.

முப்பது பேர்வரயில் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ரவிகுமார்,இந்திரன்,இளையபாரதி,வா.ஐ.ச.செயபாலன் உள்ளிட்டபலர் பேசினர்.எனக்கும் பேசுவதற்கான வாய்ப்பு தரப்பட்டது.வில்வரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப் பட்டது.

ஈழக் கவிஞனின் அவலம் குறித்த செயபாலனின் உரை அரசியல் சூழலில் பயணிக்கும் ஈழத்து படைப்பு சூழல் பற்றிய பதிவாக இருந்தது.தனது அம்மாவின் மரணம் வில்வரின் மரணம் என்று எதற்குமே போகமுடியாத வலியை உனர்ச்சிவசப் பட்டநிலையில் செயபாலன் சொன்னார்.

இன்றைக்கு ஈழத்து சூழலில் எதிரியை விடவும் எதிரியின் கூடவே இருக்கும் நம் சகோதரர்கள் குறித்தே அதிகம் பயங்கொள்ள் வேண்டியிருகிறது என்று சொன்ன கவிஞர் செயபாலன் தொடர்ந்து பேசுகையில், காந்தியவாதியான வில்வரத்தினம் வன்முறை நிறைந்த ஈழப் போராட்டத்தினை ஆதாரிக்கத்தொடங்கினார். அவர் போரட்டத்தின் தெளிவான யதார்த்தத்தை விழங்கிக் கொண்டார். வலியையும் வேதனையையும் சொல்வதாகவே வில்வரத்தினத்தின் கவிதைகள் இருந்தன.வில்வரத்தினத்துக்கு செலுத்தும் அஞ்சலியென்பது ஈழப் போரட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கு துணையளிப்பதே என்றார்.

இளையபராதி பேசுகையில் பாரதியின் கவிதையின் வீச்சோடு வில்வரின் கவிதையின் வீச்சையும் இணைத்து பேசினார்.மண்ணில் இருந்து வெளியேறுதல் பற்றிய வில்வரின் கவிதைகளை எடுத்துக் காட்டாகச் சொன்னார்.வில்வரத்தினத்தின் கவிதைகளை அவர் இறந்த செய்தி கேட்டவுடன் தேடி எடுத்து மீண்டும் படித்தேன் ஒரு கவிஞனுக்கான அஞ்சலின் அவன் இறந்த போது அவன் கவிதையினைப் படிப்பதுதான் என்றார் இளையபாரதி.

சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் தமிழரசன் பேசுகயில், 'தமிழினி 2000' ம் நடந்த இரவொன்றில் வில்வர் பாடிய பாடல்களை நினைவு கூர்ந்தார்.பேச்சுக்களைக் கேட்டு சலித்த போது வில்வரத்தினம் பாடினார் மற்றவர்களையும் பாடச்சொல்லி கேட்டார்.வில்வரத்தினத்தின் கவிதைகள் வாய்விட்டு சத்தமாக பாட வேண்டியவை வில்வர் இறந்தார் என்ற செய்தி கிடைத்தவுடன் அவர் தொகுப்பைத் தேடியெடுத்தேன். என் மாணவர்களைக் கூப்பிட்டு சத்தமாக படித்து காண்பித்தேன் என்று தமிழரசன் சொன்னார்.

6 மணி 30 நிமிடத்துக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது.

குறிப்பு: எதிர்வரும் 15 ம் திகதி 4 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள பவழவிழா கலையரங்கத்தில் வில்வரத்தினத்துக்கான அஞ்சலிக் கூட்டம் நடை பெறுகிறது.தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

சு. வில்வரத்தினம். . .

... உங்களோடு நாங்கள் நிறயப் பேச விரும்புகிறோம் பழைய செய்திகளைப் படிக்க விரும்புகிறோம் இப்படி எல்லோரும் தவிக்க விட்டுப்போனால் உங்கள் எழுத்துக்களைத் தூக்கிக்கொண்டு நங்கள் யாரிடம் போவது..?

விவரத்தினம் காலமானார் என்ற செய்தி எனக்கு கிடைத்தும் பேசுவதற்கு அல்லது எழுதுவதற்கு எதுவுமே தோன்ற வில்லை. வெறுமை மட்டுமே மீதியாக இருந்தது
.

எனக்கு மிக நெருக்கமான பழக்கம் அவருடன் இல்லை.
நிலாந்தன் சந்திக்கும் போதெல்லாம் சொல்லுவார் நங்கள் திகொன்றாய்ப் பிரிந்துகிடக்கிறோம் வில்வரின்(வில்வரத்தினம்) பாட்டைக் கேட்டுக் கொண்டே பேசுகிற இரவுகள் தொலைந்து விட்டன.ஜேசுராசா, மூ.பொ பெசமுடியவில்லை முன்னை போல் என்று வில்வரும் வருத்தப் பட்டார்.தனியன்களாகவே இப்போது நாம் இருகிறோம் என கடந்த மே மாதம் சந்தித்தக்கையில் நிலாந்தன் சொன்னார்.

எங்கள் தலை முறையில் எல்லருமே இப்போது தனியன்களாகி நிற்கிறோம் அது இருக்க மிகப் பெரும் ஆளுமை இழப்பின் ஒரு கட்டமாகவே விவரத்தினம் அவர்களின் இழப்பும் இருகிறது.

2002 இல் மானுடத்தின் தமிழ்கூடல் நடந்த பொழுதொன்றில் விவரத்தினம் எனக்கு பழக்கமானார்.

நீடித்த உரையாடலில் ஆன்மீகத்தில் இருந்து அவர் விட்டுபோன தீவக மண் வரை நிறைய உரையாடினோம். அப்போது சண்முகம் சிவலிங்கமும் கூட இருந்தார். கிழக்கு வடக்கு கலாச்சாரம் ஆவணப்படுத்தல் அரசியல் இந்திய இலங்கை இராணுவக் காலம் என பலவற்றைப் பேசியது நினைவுக்கு வருகிறது.

இதன் பின்னர் பலதடவை சந்தித்தாலும் அதிகம் இலக்கிய வாசிப்பில்லாத என்னையும் இணைத்து வைத்துக் கொண்டு அவர்கள் பேசிய நிறய விடயங்கள் எனக்கு இன்றுவரை நிறய உந்துதலைத் தருகிறது.

சமீபகாலங்களில் ஈழத்தவர்களின் இழப்புகளின் தொகையும் அளவும் அதிகமாகவே இருகிறது.ஏ.ஜே யின் இழப்பு பற்றிய செய்திகளில் இருந்து மீள்வதற்குள். . .மௌனம் மட்டுமே. .. மீதியாகா விடைதருகிறோம்

புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!

இப்போதெல்லாம் தமிழகம் எங்கும் எரியத்தொடங்கியிருக்கும் உணர்வுக்கொந்தளிப்புக்கு ஒரு சாட்சி இந்தக் கவிதை தமிழன் கோவம் கொண்டிருக்கிறான்.'ஈழத்தமிழரை ஆதரிப்பது தவறெண்டால் அந்த தவறைத் தொடர்ந்து செய்வோம்' என்ற கலைஞரின் கோவத்தைப் போல உணர்வுள்ள தாய் தமிழ் மண்ணின் எல்லா மனிதரும் வீறுகொண்டு எழுந்தால் ஈழத்தமிழருக்கு விடிவு சாத்தியமே.புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!
- வித்தகக் கவிஞர் ப. விஜய்


இந்தியா வித்தியாசமான நாடு!
உள்நாட்டுத் தொழிலாளர்களைப்
பிச்சைக் காரர்களாக்கும்!
வெளிநாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

அமெரிக்கா விவரமான நாடு!
வெளிநாட்டு தொழிலாளர்களை
பிச்சைக் காரர்களாக்கும்!
உள்நாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

இலங்கை விபரீதமான நாடு!
சவப்பெட்டிகளை தயாரித்து
சமாதானம் பேசும்!
சமாதானம் பேசிக் கொண்டே
ஏவுகணை வீசும்!

புத்தனின் போதிமரத்தில் - இன்று
செஞ்சோலை சிறுமிகளின்
உடல்கள் தொங்குகின்றன

செஞ்சோலை வளாகத்தின் மேல்
குண்டு வீசிப் பறந்தது
விமானம் அல்ல
சிங்கள ராணுவத்தின்
மானம்!

ஒரு ராணுவம்
எதிரி ராணுவத்தை தாக்கும்!
என்றும் வேவு பார்க்கும்.
ஆனால் அறுபது சிறுமிகளை
அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?

இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது
ஈழத்துச் சிறுமிகளுக்கு
பூக்கோலமும் போடத் தெரியும்
போர்க்கோலமும் பூணத் தெரியும்

அவர்களுக்குப்
பல்லாங்குழியும் ஆடத் தெரியும்
பகைவர் தலைகளுக்கு
பிணக்குழியும் தோண்டத் தெரியும்

அவர்களுக்கு
தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்
எதிரிகளின்
தலைசீவி பந்தாடவும் தெரியும்

படுகளத்தில் ஒப்பாரி ஏன்
சிலபேர் சிலிர்க்கலாம்
இது ஒப்பாரி அல்ல
இழந்த வீராங்கனைகளுக்கொரு
வீரத்தாலாட்டு!

நம் தமிழ் இளைஞர்கள்
வீறு கொண்டவர்கள்
செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை
நமீதா வீட்டில் விழுந்திருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

நாம்
குண்டுதுளைக்காத கூண்டில்
தயங்கியபடி நிற்கிறோம்
தேசக் கொடியேற்ற

அவர்கள்
குண்டு துளைப்பதற்காகவே
தயாராக நிற்கிறார்கள்
தமிழ்தேச கொடியேற்ற

நம் குழந்தைகள் கையில்
விளையாடுவதற்காக
பொம்மை துப்பாக்கிகள்

அவர்கள் குழந்தைகள் கையில்
விடுதலை ஆவதற்காக
உண்மை துப்பாக்கிகள்

நமக்கு
குளிர்பானத்தில் விஷமிருக்கிறது
அவர்களுக்கு
விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!

புறநானூற்றை
நாம் வாசிக்கிறோம்
அவர்கள்தான்
எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை
நாம் படிக்கிறோம்
அவர்கள்தான்
நடத்துகிறார்கள்!

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

தமிழனை
உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!
தமிழனுக்கு
உணர்ச்சி இருக்கிறது என்று
உணர்த்துவது வேறு!

இரண்டாவது பணியை
இந்த உண்ணாவிரதம் செய்கிறது!
உணர்ச்சி வரும் - ஒரு நாள்
புரட்சி வரும்

(பேரா. சுப. வீரபாண்டியன், தமிழர் பேரவை சார்பில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் பாடிய கவிதை)

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.

என் தோழியே,

எனது தங்கச்சி நேற்று தொலைபேசி எடுத்திருந்தாள் அண்ணா அப்பாவுக்கு உடம்பு சரியில்லை யாழ்ப்பாண கொஸ்பிட்டலில விட்டிருக்கம் ஒரு சிறிய ஒப்பரேசன் என்றாள். சரி பிரச்சினை ஒண்டுமில்லைதானே எண்டு கேட்டன். இல்லை அண்ணா அப்பா நிறய வீக்காய் போனார் அதுதன் கோர்லிக்ஸ் அல்லது எதாவது சத்தான மா வாங்கலாமெண்டு எல்ல இடமும் அலஞ்சம் ஒண்டும் கிடைகேல்லை இப்ப என்ன செய்ரதெண்டு தெரியேல்ல குழுகோஸ் கூட வாங்கிறது கஸ்டம் என்ற அவளின் பதில் கேட்டதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்பாவுக்கு வரூகிற வியாழக்கிழமை சத்திர சிகிச்சை அவசரத்துக்கு குடுக்க போதிய இரத்தம் கூட யாழ்ப்பாணம் வைத்திய சாலையில இல்லை.சென்னையில் இருந்து என்னால் என்ன செய்ய முடியும்.கனாடாவில இருந்து மாமா,சித்தி,மாமி,மச்சாள் இங்கிலாந்து,பிரான்ஸ்,சுவிஸ்,ஜேர்மன் எண்டு பல இடத்தில இருகிற அம்மாவிண்ட அப்பாவிண்ட சகோதரங்கள் அவையள்ட பிள்ளையள் சொந்தக்காரர் எண்டு பலரும் தங்கச்சியோடையும் என்னோடையும் பேசினவையள்.ஆனா அவசரத்துக்கு அப்பாவுக்கு சத்துணவுகொடுக்க யாழ்ப்பாணத்தில எதுவும் இல்லை.

என் அப்பாவை போல இப்போது எத்தனை அப்பாகளும் தங்கைகளும் இருப்பர்கள் யாழ்ப்பாணத்தில்.தேனீர் அதிகம் விரும்பிக்குடிக்கும் அப்பாவுக்கு தேனீர் கொடுக்க தேயிலை இல்லை. கிலோவுக்கு 1000 ரூபாய் தேவை.அப்பாவுக்கு நல்லபடியாக சிகிச்சை நடக்கவேணும்.அப்பா இதுவரை வைத்தியசாலையில் நோய் என்று படுத்தறியார்.அம்மவுக்கு அதுதான் நிறையப் பயம்.முந்தி ஒருக்கா விபத்தில சிக்கி ஆஸ்பத்திரியில இருந்தவர் அப்ப எல்லா சொத்தகாரரும் கூட இருந்து கண்டி வைத்திய சாலையில வைத்திருந்து பாத்தவையள் அது எழுபதில நடந்தது.அப்பவுக்கு நிறைய சொந்தக்காரர் சுற்றி இருப்பது கவனிப்பது நிறயப் பிடிக்கும்.

இப்போது யாழ்ப்பாணத்தில ஆறுமணிக்கு ஊரடங்கு உத்தரவாம்.இல்லையெனினும் கூட இருப்பதற்கு எந்த சொந்தகாரரும் இல்லை.தங்கச்சிதான் ஓடித்திரிந்து பாக்கவேணும்.முதலெண்டால் பெற்றோல் இருக்கும் உந்துருளியில போகலாம். இப்ப பாவம் சைக்கிள் மிதித்து திரியவேணும்.பரவாயில்லை மூண்டு நாலு மாதமாய் பல்கலைக் கழகம் இயங்குறதில்லை எண்ட படியால் நேரம் கிடைக்கும்.ஆனால் இப்படியே பல்கலைக்கழகம் இயங்காட்டி எப்ப அவள் பட்டம் வாங்குறது எண்டது இனப்பிரச்சினைக்கான தீர்வு போல விடைதெரியா விடையம்தான்.

நான் மக்கள் பிரச்சனையப் பாக்கிறன் படம் பண்ணப் போறன் எண்டு சென்னையில நிக்கிறன்.எல்லாரும் சொன்னமாதிரி வெளீநாஅட்டுக்கு பொயிரிந்தாலாவது இப்ப காசு அனுப்பியிருக்கலாம்.ஊடகவியளாளனா இருகோணும் என்ர மண்ணில என் மக்களூக்கு ஏதாவது செய்யோணும் எண்டு இருந்து கடசியில இலங்கையில இருக்கவும் முடிய்யமா வெளிநட்டுக்கும் போக மனமில்லாமல் வீட்டுக்கும் உதவம இருக்கிறன்.எனக்கு தெரிஞ்சு என்ர நண்பர்களில பதிக்குமேல வெளிநாடு போய்ராங்கள். ஒரு சில பேர் துரோகிகளாகவும் வேறுபலர் மாவீரர்களாகவும் செத்துப் போய்ராங்கள்.

மேலும்,
தங்கச்சியின்ர தோழிகள் நிறையப் பேருக்கு வெளிநாட்டில மாப்பிள்ளை பார்த்து அனுப்பிப் போட்டினமாம்.அம்மாதான் அதுமாதிரி தங்கச்சிக்கும் வாற அதிஸ்டத்தை தட்டிக்கழித்துக் கொண்டிருகிறதாக மாமா என்னிடம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.தங்கச்சிக்கு நிறயப் படிகோணும் எண்டு ஆசை எண்டதால படிக்க விட்டிருக்கன் எண்ட அம்மாவின் பதில் மாமாவுக்கு திருப்ப்தியில்லை.எனக்கு போன் பண்ணி சொல்லுறார் பெட்டியள்ட போக்குக்கு விட்டால் பிறகு கரைசேர்க்க கஸ்டப்படோணும் அவள் வடிவெண்டதால இப்ப கனடாவில சிற்றிசன்சிப் உள்ள பெடியள் நிறையப் பேர் கேட்கிறாங்கள் கொம்மா வேண்டாமென்றுறா எண்டு என்னட்ட சொல்லுறார்.அவளை அனுப்பினால் கொஞ்ச நாள்ல அம்மா அப்பாவும் கனடா வந்திடலாம்.அங்க(தமிழீழம் அல்லது வடக்கு கிழக்கு இலங்கை) பிரச்சனை முடியாது. ரெண்டு தங்கச்சிமாரையும் வெளி நாட்டில கட்டிக்கொடுத்துட்டு அம்மா அப்பாவும் வந்திட்டால் நீயும் இங்க வந்து சிற்றிசன் இருகிற பிள்ளைய்யாகப் பாத்துக் காட்டினால் சரி என்றது மாமாவின் வாதம்.

அண்டைக்கே சொன்னன் இப்ப கோர்லிக்ஸ் கூட வாங்க முடியாமல் கஸ்டப் படுறியள் எண்டு இப்ப மாமா சொல்லுறார்.நான் இங்க இருக்க, செலவு முதற் கொண்டு அப்பாவைக் கவனிப்பது வரை இபோது எல்லாமே தங்கச்சிமார்தான்.எனக்கு நிறய வலியும் வேதனையும் மட்டுமே மிச்சமாக இருகிறது.இது என் வீட்டு சோகம் என்று நீ நினைத்துவிடாதே யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறு லட்சம் பேரின் சோகம்.

என் தோழியே இபோதைய என் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள உன்னால் முடியும் என்பதால் இந்த மடலை எழுதுகிறேன்.லண்டனில் உன் கணவன் உனக்காக வாங்கிய புடிய வீட்டில் இருபது வயதில் உன் படிப்பை இடைநிறுத்திவிட்டு அம்மாவானவள் நீ. என்னைவிட அதிக துனபம் சுமக்கும் உன்னால்தான் என் மன உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்.

என் அம்மாவுக் ஆறுதல் சொல்லவேண்டும் அப்பாவுடன் கூட இருக்கவேணூம் என் வீட்டில் நாங்கள் ஒன்றாய் இருக்கவேணும். . . எனக்கு நிறைய ஆசையாக இருக்கு.குறைந்த பட்சம் அழுதாவது விடுகிறேன்.பொம்பிளை மாதிரி அழாத எண்டு யாரும் சொல்ல முடியாத என் தனி அறையில் அவ்வப் போது அழுது கொள்ளுவதைத்தவிர எனக்கு வேறு வழியேது.

சரி அப்பாவுக்கு உடல் நலம் தேறியவுடன் உனக்கு மீண்டும் எழுதுகிறேன்.

இப்படிக்கும்

சோமி

வணக்கம்

இந்த தளத்தை எனக்கு தந்த நண்பருக்கு எனது நன்றிகள்.

நான் தமிழ்மணத்திற்கு வந்திராத காலத்தில் தொடங்கிய தனது தளத்தை எனது இன்றைய தேவையினைக் கருத்தில் கொண்டு எனக்காக தந்துதயவிய நணபருக்கும் சயந்தனுக்கும் மீண்டும் நன்றியைச் சொல்லி இந்த தளத்தில் அவருக்கு நேரமிருந்தால் பதிவிட நான் ஒத்துழைப்புதர முடியும் ஏனெனில் கோவம் பெரும் பாலும் சமூகத்தின் எமது கோவத்தினைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். இந்த பதிவுத்தளம் எனது கட்டுப் பாட்டிலேயே இனி வரும் காலங்களில் இருக்கும் எனினும் இதில் பலரது எழுத்துகளும் அவர்களின் பெயர்களோடு இடம்பெறும்.

சோமி.