புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!

இப்போதெல்லாம் தமிழகம் எங்கும் எரியத்தொடங்கியிருக்கும் உணர்வுக்கொந்தளிப்புக்கு ஒரு சாட்சி இந்தக் கவிதை தமிழன் கோவம் கொண்டிருக்கிறான்.'ஈழத்தமிழரை ஆதரிப்பது தவறெண்டால் அந்த தவறைத் தொடர்ந்து செய்வோம்' என்ற கலைஞரின் கோவத்தைப் போல உணர்வுள்ள தாய் தமிழ் மண்ணின் எல்லா மனிதரும் வீறுகொண்டு எழுந்தால் ஈழத்தமிழருக்கு விடிவு சாத்தியமே.புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!
- வித்தகக் கவிஞர் ப. விஜய்


இந்தியா வித்தியாசமான நாடு!
உள்நாட்டுத் தொழிலாளர்களைப்
பிச்சைக் காரர்களாக்கும்!
வெளிநாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

அமெரிக்கா விவரமான நாடு!
வெளிநாட்டு தொழிலாளர்களை
பிச்சைக் காரர்களாக்கும்!
உள்நாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

இலங்கை விபரீதமான நாடு!
சவப்பெட்டிகளை தயாரித்து
சமாதானம் பேசும்!
சமாதானம் பேசிக் கொண்டே
ஏவுகணை வீசும்!

புத்தனின் போதிமரத்தில் - இன்று
செஞ்சோலை சிறுமிகளின்
உடல்கள் தொங்குகின்றன

செஞ்சோலை வளாகத்தின் மேல்
குண்டு வீசிப் பறந்தது
விமானம் அல்ல
சிங்கள ராணுவத்தின்
மானம்!

ஒரு ராணுவம்
எதிரி ராணுவத்தை தாக்கும்!
என்றும் வேவு பார்க்கும்.
ஆனால் அறுபது சிறுமிகளை
அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?

இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது
ஈழத்துச் சிறுமிகளுக்கு
பூக்கோலமும் போடத் தெரியும்
போர்க்கோலமும் பூணத் தெரியும்

அவர்களுக்குப்
பல்லாங்குழியும் ஆடத் தெரியும்
பகைவர் தலைகளுக்கு
பிணக்குழியும் தோண்டத் தெரியும்

அவர்களுக்கு
தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்
எதிரிகளின்
தலைசீவி பந்தாடவும் தெரியும்

படுகளத்தில் ஒப்பாரி ஏன்
சிலபேர் சிலிர்க்கலாம்
இது ஒப்பாரி அல்ல
இழந்த வீராங்கனைகளுக்கொரு
வீரத்தாலாட்டு!

நம் தமிழ் இளைஞர்கள்
வீறு கொண்டவர்கள்
செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை
நமீதா வீட்டில் விழுந்திருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

நாம்
குண்டுதுளைக்காத கூண்டில்
தயங்கியபடி நிற்கிறோம்
தேசக் கொடியேற்ற

அவர்கள்
குண்டு துளைப்பதற்காகவே
தயாராக நிற்கிறார்கள்
தமிழ்தேச கொடியேற்ற

நம் குழந்தைகள் கையில்
விளையாடுவதற்காக
பொம்மை துப்பாக்கிகள்

அவர்கள் குழந்தைகள் கையில்
விடுதலை ஆவதற்காக
உண்மை துப்பாக்கிகள்

நமக்கு
குளிர்பானத்தில் விஷமிருக்கிறது
அவர்களுக்கு
விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!

புறநானூற்றை
நாம் வாசிக்கிறோம்
அவர்கள்தான்
எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை
நாம் படிக்கிறோம்
அவர்கள்தான்
நடத்துகிறார்கள்!

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

தமிழனை
உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!
தமிழனுக்கு
உணர்ச்சி இருக்கிறது என்று
உணர்த்துவது வேறு!

இரண்டாவது பணியை
இந்த உண்ணாவிரதம் செய்கிறது!
உணர்ச்சி வரும் - ஒரு நாள்
புரட்சி வரும்

(பேரா. சுப. வீரபாண்டியன், தமிழர் பேரவை சார்பில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் பாடிய கவிதை)

6 மறுமொழிகள்:

Blogger Ranganathan. R said...

அற்புதமான கவிதை...

கோவமான பதிவு... ஆனால் நியாயமான கோவம்தான்.

Good Post... !

December 05, 2006 2:25 AM  

Blogger Thamizhan said...

Pl. Publish in Tamil if you can.Nandri.

Pota vil avvall ullaae pottall
"Podi" yendrae oru podu pottar
Thamilarkku nalla oru pattu
Sinhala veriyarkku varuthu Vettu!

December 05, 2006 12:40 PM  

Blogger வெற்றி said...

சோமி,
அருமையான கவிதை.

/*புறநானூற்றை
நாம் வாசிக்கிறோம்
அவர்கள்தான்
எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை
நாம் படிக்கிறோம்
அவர்கள்தான்
நடத்துகிறார்கள்! */

உண்மையான வார்த்தைகள். கவியரசர் இப்போது உயிரோடு இல்லையே எனும் ஏக்கம் என் மனதில் அடிக்கடி எழும். கவியரசர் இப்போது உயிரோடு இருந்திருந்தால் ஈழத்தில் நடக்கும் போரையும் தமிழர்களின் வீரம்,தன்மானம் போன்றவற்றைக் காவியமாக வடித்திருப்பார்.

December 05, 2006 1:34 PM  

Blogger மாசிலா said...

மனம் நெகிழ்ந்தது.
கவிதை என்பதைவிட, அழுகை அல்லது ஒப்பாரி என்பதே சரி.
எப்போதுதான் முடியுமோ இந்த அவலம்?
மனிதனுக்கு இதயத்தில் ஈரம் இல்லையா?

//நம் தமிழ் இளைஞர்கள்
வீறு கொண்டவர்கள்
செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை
நமீதா வீட்டில் விழுந்திருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்//

சரியான சவுக்கு அடி!
உண்மைதான் தமிழகத்தில் பெரும்பாலான தமிழர்கள் நடிகர்களுக்கு காட்டும் அக்கரையில் கொஞ்சமாவது இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டியிருந்தால் தமிழக மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு கூட அழுத்தம் கொடுத்து நல்ல காரியம் எதையாவது சாதித்தும் இருக்கலாம்.

December 05, 2006 2:14 PM  

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

//நம் தமிழ் இளைஞர்கள்
வீறு கொண்டவர்கள்
செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை
நமீதா வீட்டில் விழுந்திருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்//

கவிதையில் ரசித்த வரிகள்

December 06, 2006 10:57 AM  

Blogger வெங்கட்ராமன் said...

இந்த அருமையான் கவிதையை பதிவாக இட்டதற்கு நன்றி.


/**************************************
உண்மைதான் தமிழகத்தில் பெரும்பாலான தமிழர்கள் நடிகர்களுக்கு காட்டும் அக்கரையில் கொஞ்சமாவது இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டியிருந்தால் தமிழக மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு கூட அழுத்தம் கொடுத்து நல்ல காரியம் எதையாவது சாதித்தும் இருக்கலாம்.
**************************************/

நூற்றுக்கு நூறு சரியான கருத்து.

December 06, 2006 11:06 AM  

Post a Comment

தொடுப்புகள்">


இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு