அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை.

என் தோழியே,

எனது தங்கச்சி நேற்று தொலைபேசி எடுத்திருந்தாள் அண்ணா அப்பாவுக்கு உடம்பு சரியில்லை யாழ்ப்பாண கொஸ்பிட்டலில விட்டிருக்கம் ஒரு சிறிய ஒப்பரேசன் என்றாள். சரி பிரச்சினை ஒண்டுமில்லைதானே எண்டு கேட்டன். இல்லை அண்ணா அப்பா நிறய வீக்காய் போனார் அதுதன் கோர்லிக்ஸ் அல்லது எதாவது சத்தான மா வாங்கலாமெண்டு எல்ல இடமும் அலஞ்சம் ஒண்டும் கிடைகேல்லை இப்ப என்ன செய்ரதெண்டு தெரியேல்ல குழுகோஸ் கூட வாங்கிறது கஸ்டம் என்ற அவளின் பதில் கேட்டதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்பாவுக்கு வரூகிற வியாழக்கிழமை சத்திர சிகிச்சை அவசரத்துக்கு குடுக்க போதிய இரத்தம் கூட யாழ்ப்பாணம் வைத்திய சாலையில இல்லை.சென்னையில் இருந்து என்னால் என்ன செய்ய முடியும்.கனாடாவில இருந்து மாமா,சித்தி,மாமி,மச்சாள் இங்கிலாந்து,பிரான்ஸ்,சுவிஸ்,ஜேர்மன் எண்டு பல இடத்தில இருகிற அம்மாவிண்ட அப்பாவிண்ட சகோதரங்கள் அவையள்ட பிள்ளையள் சொந்தக்காரர் எண்டு பலரும் தங்கச்சியோடையும் என்னோடையும் பேசினவையள்.ஆனா அவசரத்துக்கு அப்பாவுக்கு சத்துணவுகொடுக்க யாழ்ப்பாணத்தில எதுவும் இல்லை.

என் அப்பாவை போல இப்போது எத்தனை அப்பாகளும் தங்கைகளும் இருப்பர்கள் யாழ்ப்பாணத்தில்.தேனீர் அதிகம் விரும்பிக்குடிக்கும் அப்பாவுக்கு தேனீர் கொடுக்க தேயிலை இல்லை. கிலோவுக்கு 1000 ரூபாய் தேவை.அப்பாவுக்கு நல்லபடியாக சிகிச்சை நடக்கவேணும்.அப்பா இதுவரை வைத்தியசாலையில் நோய் என்று படுத்தறியார்.அம்மவுக்கு அதுதான் நிறையப் பயம்.முந்தி ஒருக்கா விபத்தில சிக்கி ஆஸ்பத்திரியில இருந்தவர் அப்ப எல்லா சொத்தகாரரும் கூட இருந்து கண்டி வைத்திய சாலையில வைத்திருந்து பாத்தவையள் அது எழுபதில நடந்தது.அப்பவுக்கு நிறைய சொந்தக்காரர் சுற்றி இருப்பது கவனிப்பது நிறயப் பிடிக்கும்.

இப்போது யாழ்ப்பாணத்தில ஆறுமணிக்கு ஊரடங்கு உத்தரவாம்.இல்லையெனினும் கூட இருப்பதற்கு எந்த சொந்தகாரரும் இல்லை.தங்கச்சிதான் ஓடித்திரிந்து பாக்கவேணும்.முதலெண்டால் பெற்றோல் இருக்கும் உந்துருளியில போகலாம். இப்ப பாவம் சைக்கிள் மிதித்து திரியவேணும்.பரவாயில்லை மூண்டு நாலு மாதமாய் பல்கலைக் கழகம் இயங்குறதில்லை எண்ட படியால் நேரம் கிடைக்கும்.ஆனால் இப்படியே பல்கலைக்கழகம் இயங்காட்டி எப்ப அவள் பட்டம் வாங்குறது எண்டது இனப்பிரச்சினைக்கான தீர்வு போல விடைதெரியா விடையம்தான்.

நான் மக்கள் பிரச்சனையப் பாக்கிறன் படம் பண்ணப் போறன் எண்டு சென்னையில நிக்கிறன்.எல்லாரும் சொன்னமாதிரி வெளீநாஅட்டுக்கு பொயிரிந்தாலாவது இப்ப காசு அனுப்பியிருக்கலாம்.ஊடகவியளாளனா இருகோணும் என்ர மண்ணில என் மக்களூக்கு ஏதாவது செய்யோணும் எண்டு இருந்து கடசியில இலங்கையில இருக்கவும் முடிய்யமா வெளிநட்டுக்கும் போக மனமில்லாமல் வீட்டுக்கும் உதவம இருக்கிறன்.எனக்கு தெரிஞ்சு என்ர நண்பர்களில பதிக்குமேல வெளிநாடு போய்ராங்கள். ஒரு சில பேர் துரோகிகளாகவும் வேறுபலர் மாவீரர்களாகவும் செத்துப் போய்ராங்கள்.

மேலும்,
தங்கச்சியின்ர தோழிகள் நிறையப் பேருக்கு வெளிநாட்டில மாப்பிள்ளை பார்த்து அனுப்பிப் போட்டினமாம்.அம்மாதான் அதுமாதிரி தங்கச்சிக்கும் வாற அதிஸ்டத்தை தட்டிக்கழித்துக் கொண்டிருகிறதாக மாமா என்னிடம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.தங்கச்சிக்கு நிறயப் படிகோணும் எண்டு ஆசை எண்டதால படிக்க விட்டிருக்கன் எண்ட அம்மாவின் பதில் மாமாவுக்கு திருப்ப்தியில்லை.எனக்கு போன் பண்ணி சொல்லுறார் பெட்டியள்ட போக்குக்கு விட்டால் பிறகு கரைசேர்க்க கஸ்டப்படோணும் அவள் வடிவெண்டதால இப்ப கனடாவில சிற்றிசன்சிப் உள்ள பெடியள் நிறையப் பேர் கேட்கிறாங்கள் கொம்மா வேண்டாமென்றுறா எண்டு என்னட்ட சொல்லுறார்.அவளை அனுப்பினால் கொஞ்ச நாள்ல அம்மா அப்பாவும் கனடா வந்திடலாம்.அங்க(தமிழீழம் அல்லது வடக்கு கிழக்கு இலங்கை) பிரச்சனை முடியாது. ரெண்டு தங்கச்சிமாரையும் வெளி நாட்டில கட்டிக்கொடுத்துட்டு அம்மா அப்பாவும் வந்திட்டால் நீயும் இங்க வந்து சிற்றிசன் இருகிற பிள்ளைய்யாகப் பாத்துக் காட்டினால் சரி என்றது மாமாவின் வாதம்.

அண்டைக்கே சொன்னன் இப்ப கோர்லிக்ஸ் கூட வாங்க முடியாமல் கஸ்டப் படுறியள் எண்டு இப்ப மாமா சொல்லுறார்.நான் இங்க இருக்க, செலவு முதற் கொண்டு அப்பாவைக் கவனிப்பது வரை இபோது எல்லாமே தங்கச்சிமார்தான்.எனக்கு நிறய வலியும் வேதனையும் மட்டுமே மிச்சமாக இருகிறது.இது என் வீட்டு சோகம் என்று நீ நினைத்துவிடாதே யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறு லட்சம் பேரின் சோகம்.

என் தோழியே இபோதைய என் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள உன்னால் முடியும் என்பதால் இந்த மடலை எழுதுகிறேன்.லண்டனில் உன் கணவன் உனக்காக வாங்கிய புடிய வீட்டில் இருபது வயதில் உன் படிப்பை இடைநிறுத்திவிட்டு அம்மாவானவள் நீ. என்னைவிட அதிக துனபம் சுமக்கும் உன்னால்தான் என் மன உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்.

என் அம்மாவுக் ஆறுதல் சொல்லவேண்டும் அப்பாவுடன் கூட இருக்கவேணூம் என் வீட்டில் நாங்கள் ஒன்றாய் இருக்கவேணும். . . எனக்கு நிறைய ஆசையாக இருக்கு.குறைந்த பட்சம் அழுதாவது விடுகிறேன்.பொம்பிளை மாதிரி அழாத எண்டு யாரும் சொல்ல முடியாத என் தனி அறையில் அவ்வப் போது அழுது கொள்ளுவதைத்தவிர எனக்கு வேறு வழியேது.

சரி அப்பாவுக்கு உடல் நலம் தேறியவுடன் உனக்கு மீண்டும் எழுதுகிறேன்.

இப்படிக்கும்

சோமி

5 மறுமொழிகள்:

Anonymous Anonymous said...

//ஒரு சில பேர் துரோகிகளாகவும்//

You too Somee...?

December 03, 2006 2:39 AM  

Blogger துளசி கோபால் said...

(-:

December 03, 2006 11:41 AM  

Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

December 03, 2006 3:49 PM  

Blogger சோமி said...

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தி உண்மையானது.
அதே போல் மட்டக்களப்பில் என்னோடு சின்ன வயதில் படித்துகொண்டிருந்தபோது போராடப்போன சிலர் இப்போ துரோகிகளாக கொல்லப் பட்டிருக்கிறார்கள்.வேறு யாரவது நாட்டுப் பற்றாளராகக் கூட ஆகியிருக்கலாம்.தகவல் இல்லை.

வந்தவருக்கு நன்றி மௌனம் என்பதால் பேசவில்லைப் போல.

December 03, 2006 10:45 PM  

Blogger Guhapriyan said...

நாளை உங்க தந்தைக்கு சிகிச்சை வலியில்லாமல் நல்லபடியா நடக்கட்டும்.

December 06, 2006 7:07 AM  

Post a Comment

தொடுப்புகள்">


இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு